சைக்கோ திரில்லர்!.. பரத்துக்கு கை கொடுக்குமா காளிதாஸ் 2?!... வெளியானது டீசர் வீடியோ!...

Kaalidas 2: பாய்ஸ் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் பரத். அதன்பின் காதல் படம் அவரை ரசிகர்களிடம் பிரபலமடைய வைத்தது. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். கோலிவுட்டில் எப்போதும் பிஸியாக இருக்கும் ஒரு நடிகராக பரத் மாறினார். மிகவும் குறுகிய காலகட்டத்தில் அதிக படங்களில் நடித்தவரும் இவர்தான்.
ஆனால், துவக்கத்தில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்த பரத் ஒரு கட்டத்தில் இன்னொரு விஜயாக மாற ஆசைப்பட்டார். ஒவ்வொரு நடிகரின் மார்க்கெட்டையும் காலி செய்ய ஒரு இயக்குனர் வருவார். அப்படி பரத்துக்கு பேரரசு வந்தார். தனக்கு விஜய் கால்ஷீட் கொடுக்காத கோபத்தில் பரத்தை வைத்து பழனி என்கிற படத்தை எடுத்தார். அதில், பரத்துக்கு மாஸான காட்சிகளை வைத்தார்.
பரத் அப்படி நடித்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை. எனவே, படம் படுதோல்வி அடைந்தது. எனவே, அவருக்கு வாய்ப்புகள் குறைய துவங்கியது. ஒருகட்டத்தில் எப்போதாவது இவரின் நடிப்பில் ஒரு படம் வெளியாகும் என்கிற நிலை உண்டானது. அதில் ஒரு படம்தான் காளிதாஸ். 2018ம் வருடம் வெளியான இப்படத்தை ஸ்ரீ செந்தில் என்பவர் இயக்கியிருந்தார்.

போலீஸ் அதிகாரியான பரத் சிட்டியில் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் வழக்கை விசாரிப்பார். அது அவரின் குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என காட்டியிருந்தனர். இந்த படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில்தான், இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தையும் ஸ்ரீ செந்திலே இயக்கியுள்ளார். இந்த படத்தில் விடுதலை படத்தில் நடித்த பவானி ஸ்ரீ, பரத் சீனிவாசன், அபர்நதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், பூவே உனக்காக புகழ் சங்கீதாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் தொடர் கொலைகள் நடக்க அதை போலீஸ் அதிகாரியான பரத் துப்பறிவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் பரத்துக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது.