முதல் படத்திலேயே பெரிய ரிஸ்க் எடுக்கும் ஜேசன் சஞ்சய்!… சரியா வருமா?!…

#image_title
விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாடியிருப்பார். அதோடு சரி. அதன்பின் அவரை பார்க்க முடியவில்லை. சென்னையில் பள்ளி படிப்பை முடித்தவர் அதன்பின் லண்டன் சென்று தனது தாத்தா வீட்டில் தங்கினார். மேலும் கனடாவில் சினிமா இயக்கம் பற்றி படித்தார்.
The journey என்கிற குறும்படத்தையும் இயக்கினார். புகைப்படம் எடுப்பதிலும் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு. பார்க்க விஜய் போலவே இருக்கிறரே.. கண்டிப்பாக சினிமாவில் நடிப்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூட ஜேசனை வைத்து படமெடுக்க முயற்சி செய்தார்.
ஆனால், நடிப்பில் ஆர்வம் இல்லை என ஜேசன் சொல்லிவிட்டார். லைக்கா தயாரிப்பில் ஜேசன் ஒரு படம் இயக்குகிறார் என்கிற செய்தி 2 வருடங்களுக்கு முன்பே வெளியானது. இது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. விஜய்க்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. விஜயின் மாமனார் அதாவது ஜேசனின் தாத்தா மூலம் இது நடந்திருப்பதாக சொல்லப்பட்டது.

பட அறிவிப்பு வெளியானாலும் பட வேலைகள் துவங்கப்படாமலேயே இருந்தது. ஒருகட்டத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கீஷனை வைத்து ஜேசன் படம் இயக்குகிறார் என அறிவித்தார்கள். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோவையும் லைக்கா இன்று வெளியிட்டது. இந்நிலையில், இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையிலேயே ஜேசன் லைக்காவுக்கு எடுத்து கொடுக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. அதாவது, ஜேசன் சஞ்சய் சொன்ன பட்ஜெட்டை லைக்கா கொடுத்துவிட்டார்கள். அதை மீறி பட்ஜெட் அதிகரித்தால் ஜேசனே அந்த பணத்தை போட வேண்டும். இது சினிமாவில் ரிஸ்க்.

அனுபவம் உள்ள இயக்குனர்கள் இதை சமாளித்துவிடுவார்கள். திட்டமிட்ட பட்ஜெட்டை விட சில கோடிகள் குறைவாக எடுத்து கூட படத்தை முடித்து அதில் லாபம் பார்த்துவிடுவார்கள். ஆனால், ஜேசனுக்கு இதுதான் முதல் படம். மேலும், இயக்கத்திலும், தயாரிப்பிலும் அவருக்கு அனுபவமும் இல்லை. எனவே, அவர் இதை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.