ரஜினியோட அந்த படம் பிளாப்!.. டிவியிலதான் ஓடிச்சி!.. நடிகை லீக் பண்ணிட்டாரே!...

பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர் ரஜினி. நடிப்பு கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பாலச்சந்தர் சென்ற போது அவரிடம் சில கேள்விகளை கேட்டார் ரஜினி. ரஜினியின் கண்கள் மற்றும் அவர் பேசும் விதம் எல்லாம் பாலச்சந்தருக்கு பிடித்துபோக தான் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்.
முதல் காட்சியே வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே வரவேண்டும். அதை தனது ஸ்டைலில் செய்து அசத்தினார் ரஜினி. அப்போது முதல் இப்போது வரை ரஜினிக்கு மானசீக குரு என்றால் அது பாலச்சந்தர்தான். யாருக்கும் கட்டுப்படாத ரஜினி பாலச்சந்தருக்கு மட்டுமே கட்டுப்படுவார்.
அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வைத்த போதே ‘இந்த படத்தில் உனக்கு சின்ன வேடம்தான். அடுத்து 3 படங்களில் உன்னை நடிக்க வைக்கிறேன்’ என ரஜினியிடம் பாலச்சந்தர் சொல்லியிருக்கிறார். சொன்னது போலவே, மூன்று முடிச்சி உள்ளிட்ட படங்களில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். பாலச்சந்தரின் இயக்கத்தில் ரஜினி நடித்த எல்லா படங்களுமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவைதான்.
ரஜினியை பல விதமான பரிமாணங்களில் காட்டியிருக்கிறார் பாலச்சந்தர். பக்கா ஆக்சன் ஹீரோவாக இருந்த ரஜினியை தில்லு முல்லு படத்தில் காமெடி செய்ய வைத்தார். தேங்காய் சீனிவாசனிடம் இந்திரன், சந்திரன் என இரண்டு பேர் இருப்பதாக சொல்லி இரட்டை வேஷம் போட்டு ஏமாற்றுவார் ரஜினி. காமெடி கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்திருந்தார் பாலச்சந்தர்.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மாதவி நடித்திருந்தார். மேலும், நாகேஷ், சவுகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன், லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படத்தின் இறுதிக்காட்சியில் கமல்ஹாசன் வழக்கறிஞராக வந்து ரசிக்க வைத்திருப்பார். இந்த படத்தில் ரஜினியின் தங்கையாக விஜி சந்திரசேகர் நடித்திருந்தார்.
இவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘தில்லு முல்லு படம் ஃபிளாப். ஏனெனில், ரஜினியை ஆக்சன் ஹீரோவாக பார்த்த ரசிகர்கள் இந்த படத்தை ஏற்கவில்லை. படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.’ என சொல்லியிருந்தார். அதேநேரம், இந்த படம் தொலைக்காட்சியில் வெளியாகி பலமுறை ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.