வில்லன்.. ஹீரோ!.. காமெடியன்.. விழுந்து எழுந்து உச்சம் தொட்ட கவுண்டமணி!...

by MURUGAN |
வில்லன்.. ஹீரோ!.. காமெடியன்.. விழுந்து எழுந்து உச்சம் தொட்ட கவுண்டமணி!...
X

Goundamani: தமிழ் சினிமா ரசிர்களை கிட்டத்தட்ட 30 வருடங்கள் சிரிக்க வைத்த பெருமை கவுண்டமணிக்கு உண்டு. கோவையை சேர்ந்த சுப்பிரமணி பல வருடங்கள் நாடகங்களில் சீரியஸான வேடங்களில் நடித்து வந்தவர். நாகேஷ் நடித்த ஒரு படத்தில் ஒரு காட்சியில் கார் டிரைவராக நடித்ததுதான் சினிமாவில் முதல் எண்ட்ரி. எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அதோ அந்த பறவை போல பாடலில் கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருந்தார் எனவும் ஒரு செய்தி உண்டு. நாடகங்கள் என்ன வசனம் பேசினாலும் ஒரு கவுண்ட்டார் கொடுப்பார் என்பதால் சுப்பிரமணி கவுண்ட்டர் மணியாக மாறினார். அதுவே கவுண்டமணியாக திரிந்து போனது.

ஒரே ஊர்க்காரர் என்பதால் தான் உதவி இயக்குனராக வேலை செய்த பதினாறு வயதினிலே படத்தில் வாய்ப்பு கொடுத்தார் பாக்கியராஜ். அடுத்து பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தில் மனைவியின் தங்கை மீது சபலம் கொள்ளும் வேடமும் பாக்கியராஜ் மூலமே கிடைத்தது. சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். ஒரு படத்தில் கதாநாயகியை கற்பழிக்கும் காட்சியில் கூட நடித்திருக்கிறார். சுருளிராஜனின் வெற்றிடம் கவுண்டமணிக்கு நிறைய படங்களில் காமெடி செய்யும் வாய்ப்பை உருவாக்கியது.


ஏ.எம்.வீர்ப்பனை வைத்து தனக்கு தனி காமெடி டிராக் எழுத வைத்ததுதான் கவுண்டமணியின் புத்திசாலித்தனம். அப்படி வைதேகி காத்திருந்தாள் படத்தில் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக கவுண்டமணி செய்த அலப்பறை ரசிகர்களிடம் வரவேற்பை பெற அந்த ரூட்டிலேயே பயணிக்க துவங்கினார். தன்னுடன் செந்திலையும் வைத்துகொண்டார். பல படங்களில் இருவரும் இணைந்து நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தனர்.

கவுண்டமணியின் காமெடிகள் தனிக்கேசட்டாக வெளிவந்தது வரவேற்பை பெற்றது. கவுண்டமணிக்கு இருந்த மவுசை பார்த்து தேவர் பிலிம்ஸ் நிறுவனம் அவரை ஹீரோவாக போட்டு பிறந்தேன் வளர்ந்தேன் என்கிற படத்தை தயாரித்தது. இந்த படத்தின் வெற்றியால் தொடர்ந்து 10 படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்தார் கவுண்டமணி. அதில் பல படங்கள் தோல்வி.


அதனால் மீண்டும் காமெடி செய்ய துவங்கினார். சத்யராஜ், பிரபு, அர்ஜூன், கார்த்திக் ராமராஜன், சரத்குமார் போன்ற நடிகர்களின் படங்களும், சுந்தர்ராஜன், சுந்தர்.சி, குரு தனபால், கஸ்தூரி ராஜா உள்ளிட்ட பல இயக்குனர்களின் படங்களும் வெற்றியடைய கவுண்டமணியே காரணமாக இருந்தார். இப்போதும் இவரின் பல ரியாக்‌ஷன்கள் சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் மெட்டீரியலாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒருவரையும் விடாமல் நக்கலடித்தவர் இவர். அதனாலேயே கமல், ரஜினி ஆகியோர் இவருடன் அதிகம் நடித்திருக்க மாட்டார்கள்.

பேட்டி கொடுக்க மாட்டார். அதிகம் விழாக்களிலும் கலந்துகொள்ள மாட்டார். இவரின் குடும்பம் தொடர்பான செய்திகளும் வெளியே வராது. வயது மூப்பு காரணமாக முன்பு போல நடிப்பதில்லை. ஆனால், தொழில்முறை நடிகர் என்பதால் எந்த இயக்குனர் அழைத்தாலும் போய் நடித்து கொடுப்பார். சமீபத்தில் கூட அவரின் நடிப்பில் ஒத்த ஓட்டு முத்தையா என்கிற படம் வெளியானது.

தமிழ் சினிமா ரசிகர்களை பல வருடங்கள் சிரிக்க வைத்த நகைச்சுவை மன்னனுக்கு இன்று பிறந்தநாள்!...

Next Story