வந்தவருக்கும் நீச்சல் தெரியாது.. டூப் நடிகருக்கும் நீச்சல் தெரியாது! கேப்டன் எடுத்த முயற்சி

captain 1
Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அந்த வகையில் தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் விஜயகாந்த். எம்ஜிஆருக்கு அடுத்த படியாக அந்த அந்தஸ்தில் மக்கள் விஜயகாந்தை பார்க்க ஆரம்பித்தனர். யாருக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் நேரம் காலம் பார்க்காமல் ஓடி வந்து உதவி செய்யக் கூடியவர்.
எப்பொழுதுமே விஜயகாந்தின் அலுவலகத்தில் சப்பாடு ரெடியாக இருக்கும். யார் வந்தாலும் போனாலும் சாப்பிட்டு விட்டுத்தான் செல்வார்கள். அதை போல் சினிமாவில் இருக்கும் பல கலைஞர்களுக்கு விஜயகாந்த் ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார். அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் விச்சு விஸ்வநாதன் விஜயகாந்தை பற்றி சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
நடிகர் விச்சு முதன் முதலில் கேப்டன் பிரபாகரன் படத்தில்தான் அறிமுகமானார். அப்போது அவருக்கு முடி மிக நீளமாக இருக்கும். முதலில் இவரை விஜயகாந்த் பார்த்ததும் ‘சரி நான் பார்த்துக் கொள்கிறேன்’ என கூறினாராம். அதை போல் ஒரு கஷ்டமான சண்டைக் காட்சியாம். அதில் டூப் போடலாம் என விஜயகாந்திடம் சொல்ல 'வேண்டாம் வேண்டாம் நானே நடித்து விடுகிறேன்' என்று கூறியிருக்கிறார் விஜயகாந்த்.
அதுமட்டுமில்லாமல் இன்னொரு காட்சியில் 60 அடியில் இருந்து நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டுமாம். அது ஒரு சண்டைக் காட்சி. ஆனால் விச்சுவுக்கு நீச்சல் தெரியாதாம். விச்சுவுக்கு டூப் போட வந்த நடிகருக்கும் நீச்சல் தெரியாதாம். இரண்டு பேருக்கும் நீச்சல் தெரியாமல் எப்படி இந்த காட்சியை எடுப்பது என யோசித்துக் கொண்டிருக்க விஜயகாந்த் ஒரு ஐடியாவை சொல்லியிருக்கிறார்.

விச்சு நீ குதித்துவிடு. அடுத்த செகண்டே நானும் உன் பின்னாடியே குதித்து உன் சட்டையை பிடித்து மேலே இழுத்துவிடுகிறேன். நான் குதிக்கும் போது கேமிராவையும் உள்ளே கொண்டு வந்து விடுகிறேன் என சொல்லி அந்தக் காட்சியை படமாக்கினார்களாம். இதை ஒரு பேட்டியில் நடிகர் விச்சு கூறினார்.